
1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை
இலங்கையில் அரச மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி,
அரச மற்றும் அரை-அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர், அனைத்து அரச மற்றும் அரை-அரச துறை நிறுவனங்களின் ஊழியர்களின் முழுமையான ஆய்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
இதன்படி, அரச துறையில் 938,763 ஊழியர்களும், அரை-அரசத் துறையில் 217,255 ஊழியர்களும் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆய்வின் படி, அரச மற்றும் அரை-அரசத் துறைகளில் மொத்தம் 1,119,475 ஊழியர்கள் இருந்தனர். 2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543 ஆல் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், அரை-அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தோட்டத் துறை தொழிலாளர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
000