ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த உத்தரவ
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி ஏலம் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறைமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல விசேட விசாரணைகள் போதுமானதல்ல என அவதானிக்கப்பட்டுள்ளன.
விசேடமாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அண்மையில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பிணைமுறி ஊழல் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட பல வழக்குகள் தொடர்பில் மேலதிக அதிகாரிகளை நியமித்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சந்தேகத்திற்கிடமான மரணம் மற்றும் 2006 ஆம் ஆண்டில் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனமை தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் உள்ள 'டபிள்யூ 15' விருந்தகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தமிழ் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் என அழைக்கப்படும் தராகி சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவித்தப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
000