11 இராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் - இஸ்ரேலில் 48 மணி நேர அவசர கால நிலை பிரகடனம்
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகள் தம்மால் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
தம்மால் திட்டமிடப்பட்டுள்ள பாரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இஸ்ரேலின் முக்கிய பகுதிகளில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் மற்றும் கட்டுஷ்யா ரக ஏறிகனைகள் ஏவப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக விரிவான தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களைக் கண்டறிந்த ஹமாஸ் தரப்பினர், முன்கூட்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கலன்ற் (Yoav Gallant) நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அவசர கால நிலைமையினை பிரகடப்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் தளபதி ஒருவரை இஸ்ரேல் கொன்றதை அடுத்து பிராந்தியத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் டெல் அவிவின் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேலுக்கான ஒத்துழைப்பினை அமெரிக்கா இரட்டிப்பாக்கியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்ரினும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
000