யாழில் தேர்தல் கடமையில் 8 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் - உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ்
யாழ் தேர்தல் தொகுதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 8 ஆயிரத்து 232 அரச உத்தியோகத்தர் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் A.C அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் - நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நீதியானதும் நியாயமான தேர்தலாக இடம் பெறுவதற்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்களுடன் இணைந்து கிராம சேவையாளர்களின் பங்கு அவசியமாகும்.
கிராம சேவையாளர்கள் தங்கள் பிரதேசங்களில் வாக்காளர்கள் சிரமப்படாமல் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு வாக்களிப்பு நிலையங்களில் கடமை யாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் கிராம சேவையாளர்களின் பங்களிப்பு அத்தியாவசியமாக தேவைப்படும்.
ஏனெனில் பிரதேசங்களுக்கு கடமையாற்றச் செல்லும் அரச அதிகாரிகள் அப் பிரதேசங்களுக்கு புதிதாக செல்வதால் அவர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு கிராம சேவையாளர்களின் பங்கு அவசியம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற உள்ளதோடு இரண்டாம் திகதிமுதல் வாக்காளர் அட்டை விநியோகத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் இறுதித் தினமாக செப்டம்பர் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வாக்களிப்பு தினமான செப்டம்பர் 21ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் வாக்காளர் அட்டையை பெற்று வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000