ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு வலுவான ஆதரவு – கயேந்திரர்களுக்கு கோடிகளை அள்ளி வழங்கினார் ஜனாதிபதி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யார் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் தனக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது.
ஏற்கனவே யாழ் தேர்தல் தொகுதிக்காக யாழ் மாவட்ட செயலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு சுமார் 4 கோடி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு சுமார் 2 கோடி மற்றும் வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலனாதனுக்கு சுமார் 2 கோடி ரூபாய் என ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமக்கும் ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி நிதி வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அடிக்கடி கோரிக்கை முன்வைத்துவந்தார்.
இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீங்களும் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல ஜனாதிபதியின் கொள்கைகளை ஏற்று அவருடன் இணைந்து பயணிப்பதாக இருந்தால் அது கிடைக்கப்பெறும் என தெரிவித்துவந்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திறகு சுமார் 4 கோடி 60 இலட்சம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனுக்கு சுமார் 2 கோடி க்கான அனுமதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினரான எம் ஏ சுமந்திரனுக்கு சுமார் 4 கோடி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது
இதேநேரம் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கஜேந்திரர்களின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது
000