கோழி இறைச்சி முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் - சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்து
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை பச்சையாகவோ அல்லது நன்கு வேகவைக்கப்படாத கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் (H9) தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த விழிப்புணர்வு அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
தற்போது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிர்ப் பிரிவானது H5 மற்றும் H7 மாறுதல்கள் மற்றும் H9 இன்ஃப்ளூவன்ஸா மாறுதல்கள் போன்றவற்றையும் கண்டறியத் தேவையான PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் மத்தியில் பரவும் பறவைக் காய்ச்சல், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கும் என்பதால் பறவைகளையோ அல்லது அவற்றின் எச்சங்களையோ தொடக்கூடாது என்றும், கோழிப் பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தங்கள் பகுதிகளில் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்மை குறிப்பிடத்தக்கது
000