சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் - கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டது அந்நாட்டு நாடாளுமன்றம்!
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்ததாக கென்ய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது. இது தவிர ஆர்ப்பாட்டத்தின் போது மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ பதவி விலக வேண்டும் எனக் கோரியும், உத்தேச வரி உயர்வுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் கென்யா முழுவதிலும் உள்ள பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்தநிலையில்,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக தலைநகர் நைரோபியில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கும் முயற்சி தோல்வியுற்றதால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் இறுதியில் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போது, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கென்ய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
000