முதல்முறை ஸ்டொப் கிளொக் தண்டனை பெற்றது அமெரிக்க
டி20 சர்வதேச கிரிக்கெட்டை வேகப்படுத்துவதற்காக புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஸ்டொப் கிளொக் விதியின் கீழ் அமெரிக்க அணி முதல் அணியாக தண்டனை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் (12) நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி ஒரு இன்னிங்ஸில் முன்று முறை ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரை ஆரம்பிக்கத் தவறியதை அடுத்து இந்திய அணிக்கு தண்டனை ஓட்டங்களால் ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
16 ஆவது ஓவர் ஆரம்பிக்கும்போது துடுப்பெடுத்தாட கடினமான ஆடுகளத்தில் இந்திய அணி 35 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோதே அமெரிக்க அணிக்கு இந்தத் தண்டனை வழக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி இலக்கு 30 பந்துகளில் 30 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது. இதில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளை வேகப்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 1ஆம் திகதி தொடக்கம் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அணி ஒன்று பந்து வீச தாமதிப்பது தொடர்பில் இரு முறை எச்சரிக்கப்பட்ட பின்னரே இந்தத் தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000