பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது
பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்.
நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் நட்பு நிறுவனங்களுக்கும் நன்றி” என தனது வருத்தத்தினையும் அவர் தெரிவித்துள்ளார்.
ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1929 ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது. 1929 இல் 2 இலட்சத்து 90 ஆயிரம் வாசகர்களைப் பெற்ற readers digest சஞ்சிகை அந்த ஆண்டில், 9 இலட்சம் அமெரிக்க டொலர் வருமானத்தையும் ஈட்டியது. அதில், சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70க்கும் அதிகமான 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது.
ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது. அத்துடன் readers digest சஞ்சிகை சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாகவும் விளங்கியது.
மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்த readers digest சஞ்சிகை, பிரித்தானியாவில் தனது முதல் வெளியீட்டை 1938 இல் ஆரம்பித்திருந்தது.
2000 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், அதன்பின்னர் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, கடும் நிதிநெருக்கடி காரணமாக, தன் பிரிட்டிஷ் பதிப்புக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.