உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள மின்சார சபை சட்டமூலமானது, அரசியலமைப்பின் சில பிரிவுகளை மீறும் வகையிலும், அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட 14 தரப்புகள் இதற்கு எதிரான ஆட்சேபனை மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.
இந்நிலையில், மேற்குறித்த உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற உத்தரவிடுமாறு குறித்த மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த மனுவை ஆராய்ந்த மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, சட்டமூலம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை இரகசிய ஆவணம் வடிவில் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000