
பிரதேசசபைகளின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? - எதிர்க்கட்சியிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கேள்வி
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? என்று எதிர்க்கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேக்கர எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சமூக ஆலோசனைக்குழு உருவாக்கும் சுற்று நிருபத்தில், எந்த ஒரு இடத்திலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடப்படவில்லையென பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அத்துடன் குறித்த குழுவில் நாடளாவிய ரீதியிலுள்ள ஓய்வு பெற்ற பொறியியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் கிராமிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுவரென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையிலுள்ள பொறுப்புள்ள கல்விமான்களை இக்குழுவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதமர், அவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சி தெரிவிக்கின்றதா? என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.
இரண்டு வருடங்கள் நடைபெறாமலிருந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், அபிவிருத்தி குழுக்களில் பங்கு பற்றி, கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பித்துள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி, மாகாண சபை மூலமான நிதி, மத்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி என்ற ஒன்று தற்போது கிடையாதென தெரிவித்த அவர், அன்று சபை முதல்வராக பதவி வகித்து லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி, செயற்பட்ட விதம் காரணமாகவே இன்றும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதேநேரம் நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுவதாக தெரிவித்த பிரதமர், அவர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? என்றும் எதிர்க்கட்சியிடம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது