போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஈரான் அணு குண்டு தாக்குதல் எச்சரிக்கை
நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஈரான் குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஒரு போருக்கு வழிவக்கும் சூழலை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தமது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என அந்நாட்டு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அணுகுண்டை உருவாக்குவது தொடர்பில் எம்மிடம் எந்தவொரு முயற்சியும் இல்லை. அணு ஆயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் இல்லை.
ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின், எமது இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என கூறியுள்ளார்.
உலக வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கு தல் நடத்தியது. மேலும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்தது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000