
தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த வருகின்றது புதிய தொழில்துறை சட்டம்
தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த வருகின்றது புதிய தொழில்துறை சட்டம்
நாட்டின் தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய தொழில்துறை சட்டமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் தற்போது சட்டமூலம் தயாரிப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெண் தொழிலாளர்களை அதிகளவில் தொழில்துறையில் இணைத்துக்கொள்ளும் வகையில் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாப்பு மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் உலகம் தற்போது அறிவு நிலைக்கு பிரவேசித்துள்ளது. அதன் பின்னர் நவீன நிர்மாண உலகத்திற்கு நாம் செல்ல முடியும். செயற்கை சிந்தனைகளால் உலகில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது. சாப்பு மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு இணங்க பெண்கள் இரவு எட்டு மணி வரை மாத்திரமே சேவையில் ஈடுபட முடியும்.
இரவு நேரத்தில் அவர்களுக்கு சேவையில் ஈடுபட முடியாது. நாட்டின் தொழில் சட்டம் மிகவும் வலிமையானது. 1954ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் காலத்துக்கு பொருத்தமான வகையில் மாற்றம் பெற வேண்டியுள்ளது.
கைத்தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், விமான சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இந்த சட்டத்திற்கு அப்பால் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான போராட்டத்தை, நாம் முன்னெடுத்துள்ளோம்.
இரவிலும் எங்கும் பெண்கள் பயணிக்க கூடிய நிலைக்கு நாடு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சில தொழிற்சங்க தலைவர்கள் பெண்கள் இரவு நேரம் தொழில் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது வேடிக்கையானது. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000