ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 2வது நாளாக ரத்து
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் க்ரூ ஊழியர்கள் திடீர் விடுப்பு காரணமாக இரண்டாவது நாளாக ஏறத்தாழ 74 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை - கொல்கத்தா, சென்னை - சிங்கப்பூர், திருச்சி - சிங்கப்பூர், மற்றும் ஜெய்ப்பூர் - மும்பை உள்ளிட்ட உள் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே.7) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் க்ரூ ஊழியர்கள் 300 பேர் திடீர் விடுப்பு எடுத்ததால் ஏறத்தாழ 100 விமான சேவைகளை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு நிறுவனம் தள்ளப்பட்டது.
திடீர் என விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டதால் ஏறத்தாழ 15 ஆயிரம் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொண்டு வந்து புதிய வேலை விதிமுறைகளை கண்டித்து ஊழியர்கள் திடீர் விடுப்பு காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்கள் நடத்துவதில் காட்டப்படும் சமத்துவமின்மை, மூத்த பதவிகளுக்கான நேர்காணல்களை முடித்தாலும் சில பணியாளர்களுக்கு குறைந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஊழியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உரிய காரணங்களின்றி விடுப்பு எடுத்த 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்கள் விடுப்பு குறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தெரிவித்த காரணங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் அதன் காரணமாக 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், திடீர் ஊழியர்கள் விடுப்பு காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ஸ்தம்பித்து போனதாகவும் விரைவில் விமான இயக்கங்களை பழைய நிலைக்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங் தெரிவித்தார்.