பிரபல இயற்பியலாளர் `பீட்டர் ஹிக்ஸ்` காலமானார்
பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளரான பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs) தனது 94 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
‘கடவுளின் துகள்’ அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியமைக்காக இவர் உலகப் புகழ் பெற்றார்.
பிரபஞ்ச உருவாக்கத்தில் இந்த துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகள் என்று அழைக்கின்றனர்.
கடவுளின் துகள் குறித்து 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்துள்ளார். இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகள் கழித்து அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்ட சோதனையில் உறுதியானது. இதனையடுத்து குறித்த கண்டுபிடிப்புக்கான கடந்த 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து அவர் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.