அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : இம்ரான் மஹ்ரூப்
கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. செயலாளர் பதவிக்கு இதுவரை ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் செயலாளர் பதவிக்கு இதுவரை எந்த முஸ்லிம் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. கடந்த வருடம் ஜூன் மாத்தில் இதுதொடர்பாக வெளிக்கொண்டுவரப்பட்டபோதும் அந்த நடவடிக்கை இன்னும் செயற்படுத்தப்படாமல் இருக்கிறது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த 5 அமைச்சுக்களில் 2 தமிழ் செயலாளர்களும் 2 முஸ்லிம் செயலாளர்களும் ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தார்கள். இன சமநிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் ஒருவரேனும் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். முதலமைச்சரின் அமைச்சு, சுகாதார அமைச்சு வீதி அபிவிருத்தி அமைச்சுகளுக்கு தமிழ் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றுக்கு சிங்கள செயலாளர்கள் மியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்துகின்ற செயலாகவே காண்கிறேன்.
எனினும் இந்த விடயத்தை அரசியல் தலைமைத்துவங்கள் கண்டுகொள்ளாத காரணத்தினால் கிழக்கு மாகாணத்திலே அண்மைக்காலமாக அரங்கேற்றப்படுகின்ற முஸ்லிம் விரோத போக்காகவே இதனை நாங்கள் காண்கிறோம். இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பணிபுரிய முடியாத நிலையே எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே ரணில் ராஜபக்ஷ் ஆட்சியிலும் முஸ்லிம் விராேத போக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றவர்கள் என தெரிவிக்கக்கூடியவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் , இது தொடர்பாக முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.