பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார் ஜேம்ஸ் வசந்தன்
எல் கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது பிரதம மோடி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர் எல் கே அத்வானி. இவர் 2002 முதல் 2004 வரை இந்தியாவின் ஏழாவது துணை பிரதமராக இருந்தவர். அதோடு இவர் மூத்த பாரத ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். சிறிது காலம் இவர் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அரசியலில் இவருடைய பங்களிப்பை பாராட்டி 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது எல்.கே. அத்வானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி இருக்கிறார்.
அத்வானிக்கு கிடைத்த விருது:
இந்த விருது வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து விருது வழங்கியது குறித்து பிரதமர் மோடி, பொது சேவைக்கான அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவருடைய முக்கிய பங்கு நம்முடைய வரலாற்றிலேயே அழிக்க முடியாத அடையாளத்தை விட்டு சென்றிருக்கிறது.
பிரதமர் மோடியின் செயல்:
கடந்த பல சதாப்தங்களாக அவருடன் நான் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து பலரும் அத்வானியை புகழ்ந்து பேசி பாராட்டி இருக்கிறார்கள். மேலும், அத்வானிக்கு விருது வழங்கும்போது பிரதமர் மோடி செய்திருக்கும் செயல் தான் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, திரௌபதி முர்மு அவர்கள் எழுந்து நின்று அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கி இருக்கிறார். அப்போது அவர் அருகில் மோடி அமர்ந்திருந்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை பார்த்து தான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இவரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், இந்தியாவின் முதல் பெண்மணி எழுந்து நின்று மரியாதை கொடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருக்கிறார்.
இது கீழ்த்தரமான செயல். கொஞ்சமாவது கல்வி அறிவு இருந்திருக்கலாம். திரௌபதி முர்முவை அவர் இப்படி நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது ஜேம்ஸ் வசந்தன் பதிவுதான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு சிலர் புகைப்படத்தை மட்டும் பார்த்து விமர்சிக்க வேண்டாம். மோடி விருது வழங்கும் போது எழுந்து நின்று தான் இருந்தார். விருது கொடுத்த பிறகுதான் அத்வானி அருகில் அமர்ந்தார் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.