எவ்வாறான சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிட்டதில்லை
நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவுசெய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும்.
ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவை குறைத்தல், நேர வீண்விரயத்தை குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.
ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.