ஹரி நாடார் கைது; 4 கிலோ தங்க நகை பறிமுதல்
பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகளைப் பெற்றார்.
கழுத்து நிறைய நகைகளுடன் நகைக்கடையாக வலம் வந்த அவர் தற்போது மோசடி புகாரில் கைதாகியிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் அளித்த புகாரின் பேரில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரி நாடார் கைது பற்றி கர்நாடக குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தபோது,”நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார் சமீப காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு ஏராளமாக பணம் தேவைப்பட்டது. அதனால் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார்.
பணத்தேவையில் இருப்பவர்கள், சுலபமாகவும் குறைந்த வட்டியிலும் கடன் கிடைப்பதால் கமிஷன் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் யாருக்கும் கடன் வாங்கிக் கொடுப்பதில்லை. கிடைத்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பதுமில்லை.
அந்தப் பணத்தை வைத்து தேர்தலில் நன்றாக செலவு செய்திருக்கிறார். கடன் தொகை கிடைக்காததால் கமிஷனாகக் கொடுத்த பணத்தை வெங்கட்ராமன் சாஸ்திரி திருப்பிக் கேட்டுள்ளார். அதற்காக அவருக்கு ஹரி நாடாரும் அவரது கூட்டாளிகளும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
ஹரி நாடாரின் கூட்டாளியான ரஞ்சித் பணிக்கரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக ஆசை ஏற்படுத்தி மோசடி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஹரி நாடார் கூட்டாளிகள் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்று போலீஸார் தெரிவித்தனர்.