தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார்.
தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலேயே பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற இருக்கிறது.
முதல் அமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்து வைக்கிறார்.