புது கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அண்மையில் அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் நியமித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி கட்சியில் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயரிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1. தற்போதைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்றால், நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் என கடுமையாக சாடியுள்ளார்.
2. மேலும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ கொள்கை பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியபடுத்த முடியும்.
3. என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.
4. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கும் வழிவகுப்பது தான் நமது இலக்கு.
5. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6. அரசியல் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.
7. என் சார்பில் ஏற்கனவே ஒப்புகொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.