திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவருக்கு தமிழக அரசு முழு அரசு மாரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தி கௌரவித்தது.
விஜயகாந்த் மறைந்து 15 நாட்கள் ஆகின்ற நிலையில், விஜயகாந்தின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் திமுகவினரையும், அதற்குத் துணைபோகிற அரசு அதிகாரிகளை கண்டிக்கிறேன் என்று கூறியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் ஜனவரி 20 ஆம் தேதி கள்ளக் குறிச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
‘’தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினாக இருந்தபோது, செய்த வியக்கத்தக்க மக்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் வகையில், திமுகவினரின் தூண்டுதலால் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது.
முதலில் மாடாம்பூண்டி கூட்ரோடு அடுத்தது, மணலூர்பேட்டை என விஜயகாந்தின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் திமுகவினரையும், அதற்கு துணைபோகிற அரசு அதிகாரிகளை கண்டிக்கிறேன். இதைக் கண்டித்து வரும் ஜனவரி 20 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.