ராஜஸ்தானில் டிஜிபிக்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
ஜனவரி 6, 7 தேதிகளில் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் 2023-ம் ஆண்டுக்கான அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபிக்கள்) / காவல்துறைத் தலைவர்கள் (ஐஜிக்கள்) மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனவரி 5 முதல் 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் இணையவெளிக் குற்றங்கள், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பில் நிலவும் சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் எனும் உருமாற்றம் செய்தல் போன்ற புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் போன்ற காவல்துறை மற்றும் பாதுகாப்பில் எதிர்காலக் கருப்பொருள்கள் குறித்தும் இந்த மாநாடு விவாதிக்கும். உறுதியான நடவடிக்கை அம்சங்களை அடையாளம் காணவும், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அடையாளம் காணப்பட்ட கருப்பொருள்கள் குறித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் உச்சகட்டமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகள் ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநாட்டில் முன்வைக்கப்படும். இதனால் மாநிலங்கள் பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.