விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள், தேமுதிகவினர், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர்.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விஜயகாந்தின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.