அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் - முதியவர் சர்ச்சை பேச்சு
அயோத்தி: பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து வர உள்ளார்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் 3 ஆயிரம் விவிஐபிக்கள், நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் மற்றும் 50 நாடுகளை சேர்ந்த வெளிநாடு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் பேசும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் முதியவர், ‛‛ராமர் கோவில் கட்டி வழிபடுங்கள். ஆனால் மோடி, யோகி இல்லாத நாளில் ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம்'' என கூறுகிறார்.
அதாவது மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அகற்றப்படும்போது ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என அந்த நபர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.