போன் செய்த போது எடுக்காத மனைவியை கொலை செய்த கணவர்
கர்நாடக மாநிலம், சாம்ராஜ நகர் காவல் நிலையத்தில் கிஷோர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சிக்மகளூர் பகுதியை சேர்ந்த பிரதீபா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
அப்போதிலிருந்தே பிரதீபா மீது கணவர் கிஷோருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 11 நாள்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால், தனது தந்தை வீட்டிற்கு பிரசவத்திற்காக பிரதீபா சென்றுள்ளார். அப்போது, கிஷோர் சுமார் 150 முறைக்கும் மேல் பிரதீபாவிற்கு போன் செய்தும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கோபமடைந்த கிஷோர், சுமார் 230 கிலோ மீட்டர் பயணித்து பிரதீபா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, பூச்சி மருந்தை குடித்த கிஷோர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு, பூச்சிமருந்து குடித்ததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், பிரதீபாவின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குணமடைந்த உடன் கிஷோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.