நள்ளிரவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மடக்கி பொதுமக்கள் வைத்த கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையை ஆள் உள்ள கேட்டாகவோ அல்லது மேம்பாலமாகவோ தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிராமத்து மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கிராமம் வழியாக செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. லாந்தை, கண்ணணை,பெரிய தாமரைக்குடி, சின்னதாமரைக்குடி, திருப்பனை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடக்கிய 600 குடும்பங்களை சேர்ந்த 2500 மக்கள் அந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், மழைக்காலத்தில் அந்த ரயில்வே சுரங்கப்பாதை நீரினால் மூழ்கி விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில்வே சுரங்கபாதையால் தாங்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அவசரகாலங்களில் நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட ஏற்றி செல்வதற்கு கூட சிரமப்படுவதாகவும், வெளியூரில் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இறந்த நபர்களை அடக்கம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனை சரி செய்யகோரிய அவர்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்து அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனர். அதில், ரயில்வே சுரங்கப்பாதையை ஆள் உள்ள கேட்டாகவோ அல்லது மேம்பாலமாகவோ தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் அவர்களுடைய கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சரிடம் கூறி அதற்கான பணிகளை விரைவாக செய்து தருகிறேன் என கிராம மக்களிடம் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து பாலத்தையும் பார்வையிட்டு சென்றார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள லாந்தை, கண்ணனை உள்ளிட்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.