தேர்தலில் ஆட்டம் கண்ட அமமுக, தேய்ந்த தேமுதிக
“2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், நாங்கள் அதிமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று தினகரன் ஆவேச சபதம் எடுத்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதிவரை அமமுக தனித்துப் போட்டியிடும் சூழல்தான் இருந்தது. பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தினகரன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தனக்கே முதல்வர் வேட்பாளர் அந்தஸ்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று, நடிகர் சரத்குமார் மூலம் கமலுக்கு அழுத்தம் கொடுத்தார், தினகரன்.
கமலோ, தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்பதாக இருந்தால் மட்டுமே கூட்டணி என்று கறார் காட்டினார். இதனால் அமைய இருந்த கூட்டணி முறிந்து போனது.
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்தாலும் கூட தேமுதிகவுக்கு தாராளமாக 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 23 தனித்தொகுதிகள் ஆகும்.
கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் களமிறங்கினார். கடம்பூர் ராஜுவை 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காட்டுவேன் என்றும் முழக்கமிட்டார்.
தேமுதிகவின் பொருளாளரான பிரேமலதா தனது கணவர் விஜயகாந்த் 2006–ல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விருத்தாசலம் தொகுதியில் சென்டிமெண்டாக களமிறங்கினார். கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் அவர் தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டார். அதேநேரம் உடல்நலக் குறைவான நிலையிலும் விஜயகாந்த் பல தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 2-ந் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, கோவில் பட்டியில் 69 ஆயிரம் ஓட்டுகள் பெற்று அதிமுகவின் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றிருந்தார். டிடிவி தினகரன் சுமார் 56 ஆயிரம் ஓட்டுகளுடன் 2-ம் இடம் பிடித்தார்.
விருத்தாசலத்தில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா 26 ஆயிரம் ஓட்டுகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்திருந்தார். டெபாசிட் தொகையையும் பறிகொடுத்தார்.
காரைக்குடி, திருவாடானை, மேலூர், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். தேமுதிக தரப்பிலோ 10 ஆயிரம் வாக்குகளை நெருங்குவதே கடினமான காரியமாக இருந்தது. 161 தொகுதிகளில் போட்டியிட்ட தினகரன் கட்சிக்கு 2.47 சதவீத ஓட்டு கிடைத்தது. 60 தொகுதிகளில் களமிறங்கிய தேமுதிகவுக்கு மொத்தமே ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்தன.
2016 தேர்தலில் தேமுதிக பெற்ற ஓட்டு சதவீதத்தில் 6-ல் ஒரு பங்குதான் தற்போது அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. தினகரன் கட்சிக்கோ வாக்குகள் சுமார் 3 சதவீதம் சரிந்து விட்டது.
மிக மிகக் குறைவான வாக்கு சதவீதத்தை தேமுதிக பெற்றிருப்பதால், இனிவரும் தேர்தல்களில், “எங்களுக்கு இத்தனை இடங்கள் கொடுங்கள்” என்று எந்த கட்சியிடமும் பேரம் பேச முடியாத நெருக்கடி சூழல் அக்கட்சிக்கு உருவாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் அதிமுக 12 இடங்களை ஒதுக்க முன்வந்தபோது அதை நிராகரித்து, திமுகவுடன் தேமுதிக திரைமறைவில் பேச்சு நடத்தியது. திமுக 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முன் வந்தது. இந்த இரு வாய்ப்புகளையும் தேமுதிக நழுவ விட்டதால் தற்போது கட்சி மிகவும் தேய்ந்த நிலைக்கு சென்றுவிட்டது.
ஏகப்பட்ட எதிர்கால கணக்குகளை போட்டு வைத்திருந்த தினகரனின் அமமுகவும் அடியோடு ஆட்டம் கண்டுள்ளது. இக்கட்சியும் இனி வரும் தேர்தல்களில் யாருடனும் தொகுதி பேரம் பேச முடியாத படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
தேர்தல் நடப்பதற்கு முன்பு, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 3-வது இடத்தை பிடிக்கப்போகும் அணி எது? என்ற கேள்வி எழுந்தது. தற்போது ஓட்டு சதவீத கணக்குகளை ஒப்பிட்டு பார்க்கும்போது 6.6 சதவீதம் பெற்ற நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தையும், தினகரனின் அமமுக 4-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன. கமல் கட்சி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக வாங்கிய ஓட்டு சதவீதத்தை 2021 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அக்கட்சி 3 சதவீத வாக்கை இழந்து இருக்கிறது. கமல் கட்சியோ நாடாளுமன்ற தேர்தலில் வாங்கியதை விட 1.5 சதவீத ஓட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் உண்மையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது, அமமுகதான்.