இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை சூறாவளியாக சுழற்றி அடித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினந்தோறும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2-வது அலையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை வழங்கி உதவி புரிகின்றன.
ஏற்கனவே, சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்திய விமானப்படை மூலம் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்த நிலையில் இன்று இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னைக்கு விமானப்படை விமானங்கள் மூலம் வந்தடைந்தன. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.