தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் ரூ.2000 அபராதம்
தமிழில் பெயர் பலகை இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என கேள்வி எழுப்பியதுடன் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறி்க்கையில், "வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை எனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை தயார்நிலையில் உள்ளது. விரைவில் அமல்படுத்தப்படும். மேலும் தற்போது உள்ள அபராத தொகை ரூ.50-ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உரிமம் வழங்குவது மற்றும் புதுப்பித்தலின் போது பெயர் பலகை தமிழில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழ் பலகை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.