நாட்டில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் டலஸ் அழகப்பெரும
நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவலை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லையென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட கொவிட் செயலணிக் குழுக்கூட்டத்தில் பங்கேற்ற போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஒட்சிசன் வழங்கும் பிரதான நிறுவனங்கள் இரண்டின் பிரதானிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நாளாந்த ஒட்சிசன் தேவை 22 ஆயிரம் லீற்றர்களாகும். இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்கள் இரண்டும் நாளாந்தம் 67 ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை உற்பத்தி செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பிரகாரம் நாட்டில் ஒட்சிசனுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை. எனினும், இந்த ஒட்சிசன் அளவு போதுமானதாக அமையாவிடின் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனைக் கொண்டுவருவதற்கு தீர்மானித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.