அதானியுடன் போட்டி போட்டு ஓடிடி தளத்தை கைப்பற்ற நினைக்கும் கலாநிதி மாறன்
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான டிஸ்னி, ஹாட் ஸ்டார் நிறுவனத்தை வாங்கி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என அறியப்பட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. லைவ் கிரிக்கெட் போட்டியிலிருந்து டாப் ஹீரோக்களின் படங்கள் வரை இந்த ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் திடீரென ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பை அம்பானியின் ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. இது டிஜிட்டல் துறையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் டிஸ்னி சில நஷ்டங்களையும் சந்தித்தது. அதை தொடர்ந்து தற்போது அவர்கள் இந்திய வர்த்தகத்தை முடித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள்.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் தற்போது விற்பனைக்காக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. முன்னதாக அம்பானியிடம் பேசப்பட்ட நிலையில் தற்போது சன் நிறுவனர் கலாநிதி மாறனிடம் பேசப்பட்டு வருகிறது. அதே போன்று அதானி குழுமமும் இதை கைப்பற்றுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எப்படியும் இந்த பிசினஸ் பல நூறு கோடியை தாண்டி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் கலாநிதி மாறன் இதை மட்டும் கைப்பற்றி விட்டால் பல முன்னணி நிறுவனங்களுக்கே ஆட்டம் காட்டி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த பேச்சு வார்த்தை இப்போது தொடக்க நிலையில் தான் இருக்கிறது. அதேபோன்று சமீபத்தில் தான் என்.டி.டி.வி(NDTV) நிறுவனம் அதானி குழுமத்தின் கைக்கு வந்தது. அதனால் டிஸ்னி நிறுவனத்தையும் கைப்பற்றுவதில் அவர்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த போட்டியில் வெல்ல போவது யார் என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.