பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் முன்னரே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.