மணிப்பூர் கொடூரம்: மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்க செய்யக்கோரி மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மணிப்பூரில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மணிப்பூர் காவல்துறை இதுவரை 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் விடுத்துள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மணிப்பூர் மாநில தலைமை செயலாளர், டிஜிபி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.