மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் என மிரட்டல்
பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30) இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. செல்போனில் பப்ஜி மொபைல் கேம் விளையாடுவதில் சீமா ஹைதர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
பப்ஜி விளையாட்டின் போது சீமா ஹைதருக்கும் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி நேபாளம் வழியாக இந்தியா வந்தார். பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர்.
இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது.
சச்சினை தான் காதலிப்பதாகவும் பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்றும் இந்தியாவிலேயே தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் சீமா தெரிவித்தார். தற்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால் மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த நேரிடும் என்ற மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. மும்பை போலீசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்றால் மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்.
இந்த தாக்குதலுக்கு உத்தரபிரதேசம், மராட்டிய அரசுகளே காரணம் என்று அந்த நபர் உருது மொழியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல் விடுத்தது யார்? பாகிஸ்தானை சேர்ந்த யாரேனும் இந்த மிரட்டல் விடுத்தனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.