ரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாட்னா சந்திப்பின் நெரிசலான நடைமேடைகளில் ரயில்வே அறிவிப்பு வெளியாகும் டிவி திரைகளில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்னா சந்திப்பு நடைமேடைகளில் ரயில் ஏறுவதற்கும், தங்கள் உறவினர்களை அழைக்கவும் வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பயணிகள், நடைமேடைகளில் பொருத்தப்பட்டிருந்த டிவி திரைகளில் வெளியான ஆபாச படத்தை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் முகம் சுழித்தனர். ஆபாச காட்சி சுமார் மூன்று நிமிடங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்ததால் அது நிறுத்தப்பட்டது.
பயணிகள் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிவி திரைகளில் வழக்கமான அறிவிப்புகளை வெளியிட கொல்கத்தாவை சேர்ந்த ஏஜென்சிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு பின் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆபாச வீடியோக்களை இயக்கிய ஆப்ரேட்டர் தப்பியோடிய நிலையில், ரயில்வே அதிகாரிகள் அவரை தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.