இந்தியாவில் பரவி வரும் எச்3என்2 வைரஸ்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 2 முதல் 3 மாதங்களாக எச்3என்2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதனால், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும் காணப்படும்.
நாட்டில் மற்ற வகை இன்புளூயன்சாவை விட இந்த வகை பாதிப்புகளால் பலர் சிகிச்சைக்கு சேர்ந்து வருகின்றனர் என்று ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதனால், மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுக்க வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) அறிவுறுத்தி உள்ளது.
இந்த பருவ காய்ச்சலானது 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 3 நாட்களுக்கு பின்னர் காய்ச்சல் போகும். ஆனால், இருமல் 3 வாரங்கள் வரை தொடரும். மேல் சுவாச குழாய் பகுதியில் தொற்றும், காய்ச்சலும் ஏற்படும் என்றும் ஐ.எம்.ஏ.வின் நிலை குழு தெரிவித்து உள்ளது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுகிறது.
டாக்டர்கள் அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்படி பரிந்துரைத்து உள்ளதுடன், ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என ஐ.எம்.ஏ. கேட்டு கொண்டு உள்ளது.இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி எடுத்து கொள்ளும்போது, நோயெதிர்ப்பு திறன் குறைந்து போவதுடன், உண்மையான தேவையாக இருக்கும்போது எடுத்து கொண்டால், அது பலனளிக்காமல் போய் விடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.