அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி - ஓ.பன்னீர்செல்வம் கடும் கோபம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு ஈபிஎஸ் தான் காரணம் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும்! வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.
கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.