ரேசன் கடைகளில் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி
நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை போக்க மத்திய அரசு தானியங்கள் உள்ளிட்ட சத்துமிக்க உணவு பொருட்களை ரேசன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகிய சத்துகளை கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு விநியோகித்து வருகிறது.
ஆரம்ப கட்டமாக இந்த அரிசி சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கிய இந்திய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
அதையடுத்து தற்போது ரேசன் கடைகளில் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் 7.5 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.