முல்லைத்தீவு வட்டுவாகல் முகத்துவார பகுதி இன்று பாரம்பரிய வழிபாடுகளுடன் மாலை 5.00மணியளவில் முல்லைத்தீவு கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் பாய ஆரம்பித்துள்ளது.இதனை கருத்திற்கொண்டு கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் இன்றைய தினம் மாலை 3.00மணிக்கு மாவட்ட நீரியல் மற்றும் கடற்றொழில் வள அலுவலகத்தில் மீனவ, விவசாய பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் வட்டுவாகல் முகத்துவார பகுதி இன்று(09) மாலை 5.00மணியளவில் முல்லைத்தீவு கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.தாழ்நிலங்கள் மற்றும் பெரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதியே இவ்வாறு வெட்டப்பட்டு கடலுடன் சங்கமிக்க விடப்பட்டுள்ளது.இதன்போது பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, பெக்கோ இயந்திரம் கொண்டு குறித்த முகத்துவார பகுதி வெட்டப்பட்டு கடலில் நீர் கலக்கவிடப்பட்டுள்ளது.இதன் மூலமாக குறித்த பிரதேசத்தின் வயல் நிலங்களில் புகும் நீரினை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதன்போது குறித்த இடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், விவசாய மீனவ சங்க அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகி இருந்தனர்.