ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் மரணிப்பர் - அதிர்ச்சி தகவல்
ஐரோப்பிய சுற்று சூழல் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது, 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்பட்டு ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் என பதிவாகி வரும் சூழலில், இந்த மரண எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், இந்த நூற்றாண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த 1980 முதல் 2020 வரையிலான 40 ஆண்டுகளில் அதிக வெப்பத்தினால் மட்டுமே 1.29 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என காப்பீடு தரவுகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை சார்ந்த அனைத்து மரணங்களையும் தடுக்க முடியும் என்றும் ஐரோப்பிய சுற்று சூழல் கழகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.