இந்திய ஒற்றுமைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது - ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை(பாரத் ஜடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானா சென்றடைந்தது. அங்கு அவரது நடைபயணம் நேற்றுடன் முடிந்தது. இது நாள் வரை அவர் 61 நாட்கள் நடந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவில் ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியத்திற்குள் நுழைந்தது. நாந்தெட் மாவட்டம் தெக்லூரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவரது நடைபயணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் ஆகியோர் முன்னிலையில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகளில் ஒற்றுமை தீப்பந்தங்களை ஏந்தினர்.
தெக்லூரில் ராகுல்காந்தி கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தனது கட்சியின் தற்போதைய பாரத் ஜடோ யாத்திரை எந்த நிலையிலும் நிறுத்தப்படாது அது திட்டமிட்டபடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தான் நிறைவு பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதற்கு முன்பு யார் நினைத்தாலும் பாதியில் நிறுத்த முடியாது என்றும் "இந்த யாத்திரையின் நோக்கம் (மக்கள்) இந்தியாவை இணைப்பதும், நாட்டில் விதைக்கப்படும் பிளவு மற்றும் வெறுப்புக்கு எதிராக குரல் எழுப்புவதும் ஆகும்" "விவசாயிகள் தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள், வணிகர்களாக யாராக இருந்தாலும், எங்கள் கதவுகளும் இதயங்களும் அனைவருக்கும் திறந்திருக்கும்," என்றும் "நாங்கள் மராட்டியத்தின் குரலையும் வலியையும் கேட்க விரும்புகிறோம்" என்று கூறினார்.