ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி
இரண்டாம் உலக போரில் ஜப்பானின் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கடற்படையின் 70-வது ஆண்டு நினைவு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வதேச கடற்படை பயிற்சிக்கு ஜப்பான் ஏற்பாடு செய்தது. தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே யோகோசுகாவில் உள்ள சுகாமி வளைகுடா பகுதியில் இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன. மேலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர் விமானங்களையும் அனுப்பி உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் நடத்தும் இந்த சர்வதேச கடற்பயிற்சியில் தென்கொரியா முதல் முறையாக கலந்து கொண்டுள்ளது. போர்க்கால பாதிப்புகளால் மோசமாக இருந்து வந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட தொடங்கியிருப்பதை இது வெளிப்படுத்தி உள்ளது.
எனினும் இந்த பயிற்சியில் சீனா கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் யோகோகாமாவில் இன்றும், நாளையும் நடைபெறும் மேற்கு பசிபிக் பிராந்திய கடற்படை மாநாட்டில் சீனா கலந்து கொள்கிறது. இதில் சுமார் 30 நாடுகளை சேர்ந்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.