திடீர் கோடீசுவரரான காவல் அதிகாரி
பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆமீர் கோபங். இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்து உள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். இதுபற்றி கோபங் கூறும்போது, இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில், எனது கணக்கில் இதுவரை சில ஆயிரங்களை தவிர வேறு எதனையும் நான் பார்த்தது இல்லை என கூறியுள்ளார். எனினும், அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
உடனடியாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு, கோபங் ஏதேனும் செயல்படுவதற்கு முன் வங்கி அதிரடியாக அவரது கணக்கை முடக்கியது. அவரது ஏ.டி.எம். அட்டையையும் பணம் எடுக்க முடியாதபடிக்கு முடக்கி விட்டது. காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் எப்படி, எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என விசாரணை தொடங்கியுள்ளது. இதேபோன்ற சம்பவம் பாகிஸ்தானின் லர்கானா மற்றும் சுக்கூர் மாவட்டங்களிலும் நடந்து உள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி இருக்கிறது. லர்கானாவில் 3 காவல் அதிகாரியின் வங்கி கணக்கிலும், சுக்கூரில் ஒரு காவல் அதிகாரியின் வங்கி கணக்கிலும் ரூ.5 கோடி அளவுக்கு பணம் விழுந்துள்ளது.