பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
பாகிஸ்தானில் மனித உரிமைகள் அவல நிலையை எடுத்து காட்டும் வகையில், அந்நாட்டில் இருந்து வெளிவர கூடிய சிந்த் எக்ஸ்பிரஸ் என்ற ஊடக தகவல் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. அந்த அறிக்கையின்படி, அந்நாட்டில் திருமணம் செய்து வைக்கப்படும் 45 லட்சம் சிறுமிகள் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே 1.90 கோடி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை பிச்சை எடுக்க அழுத்தம் தருபவர்கள், பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பிச்சை கேட்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான புகலிடம் கொடுத்து, கல்வி மற்றும் திறன் பயிற்சி பெற செய்து அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றும் செயல் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என அதிர்ச்சி தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு வெளியான நடப்பு 2022-ம் ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையின்படி, சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் மொத்தம் கணக்கிலுள்ள 170 நாடுகளில் பாகிஸ்தான் 167-வது இடம் வகிக்கிறது என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், அரசு சாரா அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி, கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தானில் 2,200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவர், சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2,211 ஆக உள்ளது. இது அந்நாட்டில் மனித உரிமைகளின் இருண்ட சூழ்நிலையை எடுத்து காட்டியுள்ளது.