பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான் கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில்7ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான் கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதை காட்டுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.