தவறு இடம்பெறுவது இயல்பு , அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை : மகிந்த ராஜபக்ச
இலங்கையில் அமைதி நிலவுவதையும் இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் சகித்துக் கொள்ள முடியாத சிலர், கையேந்தும் நிலையையே விரும்புவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் பேசிய அவர், இந்நிலைமை மாற வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது. அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.
சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக்கொண்டு, சுமைகளை எம்மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என பந்தாடியும் எம்மை பந்தாடியும் வருகின்றனர்.
பொதுவேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரசக் கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்” என தெரிவித்தார்.