
சிறையில் இருந்து திலினி பிரியமாலி சென்ற பயணம்
நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று (15) திடீர் சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். அதன்படி, சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
திலினி ப்ரியமாலியின் பணப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இந்தக் கட்டிடத்திலேயே இடம்பெற்றுள்ளதுடன், 226 மில்லியன் ரூபா பெறுமதியான முறைப்பாடு தொடர்பான கொடுக்கல் வாங்கல் இந்தக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளர் என கூறப்படும் ஜானகி சிறிவர்தனவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
226 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜானகி சிறிவர்தனவிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.