உடனடியாக தீர்வுகாண அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கினார்.
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று (13) அலரி மாளிகையில் நடைபெற்றபோதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார். 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவால்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத் துறை மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மேலதிகமாக, வறுமைப் பிரச்சினையை மீளாய்வு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம்செலுத்துதல், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தின் சவால்களை முறியடித்தல், நீர் முகமைத்துவம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களால் தீவிரமடைந்து வரும் போசாக்கு குறைபாடு குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், திரிபோஷா உற்பத்தி குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ள சோள உற்பத்தி குறைவடைந்தமைக்கு, துறைமுக தாவர தனிமைப்படுத்தல் பிரிவின் ஊடாக, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சோள விதைகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதன்போது சுட்டிக் காட்டினார்.