வைரலாகும் நாகாலாந்து மந்திரியின் டுவீட்
நாகாலாந்து மாநிலத்தின் பழங்குடியினர் விவகார மந்திரி டெம்ஜென் இம்னா அலோங். இவர் தனது நகைச்சுவை மற்றும் சர்ச்சை பேச்சுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். தனது வித்தியாசமான பேச்சின் மூலம் இணையவாசிகள் மத்தியில் தனி கவனத்தை பெற்றுள்ளார் டெம் ஜென் இம்னா. மக்கள் தொகை குறித்து சமீபத்தில் பேசிய இவர் "மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எப்போதும் சிங்கிளாக (Single) இருங்கள்" என தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ஒருமுறை வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் குறித்து பேசிய இவர் 'எங்கள் கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்' என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒருமுறை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், "என் கண்கள் சிறியதாக இருக்கலாம், ஆனால் ஒரு மைல் தூரத்தில் இருந்தும் என்னால் கேமராவை பார்க்க முடிகிறது. எப்போதும் போஸ் கொடுப்பதற்கு தயார். இதை படிக்கும்போது நீங்கள் சிரிப்பதை நான் பார்க்கிறேன்" என பதிவுட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.